சென்னை: இந்தியாவிலேயே மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் சென்னையில் அமைந்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள் தான். அதில் மிகவும் முக்கியமானது சென்னையில் அமைந்துள்ள 1835ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 1664 நவம்பர் 16ஆம் தேதி அரசு பொது மருத்துவமனையாக நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டில், மதராசு பெருநகரம் சென்னை என மறுபெயரிடப்பட்டபோது, சென்னை மருத்துவக் கல்லூரி என இக்கல்லூரியின் பெயரும் மாற்றப்பட்டது.
அதேபோல், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கீழ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்காக தனியார் மருத்துவமனைகளும் போட்டி போட்டுக் கொண்டு சர்வதேச தரத்திலான சிகிச்சையை வழங்கி வருகிறது.
வெளிநாடு மக்களைக் கவரும் மருத்துவம்: சென்னை மருத்துவ சுற்றுலாவில் அதிகளவில் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்து வருகிறது. மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற மருத்துவர்களைப் பெற்றுள்ளது. இதனால், சென்னைக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் மருத்துவத் துறையின் வளர்ச்சி குறித்து எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் புற்றுநோயில் சேவைகள் துறையின் இயக்குனர் எம்.ஏ.ராஜா கூறும்போது, "சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தேன். அப்போது மிகவும் பழமையான மருத்துவக் கல்லூரியாக சென்னை மருத்துவக் கல்லூரி இருந்தது. அங்கு 7க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தன.
மூளை, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அங்குதான் படிக்க முடியும். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவ மையத்தில் மட்டுமே அப்போது சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் படிக்கும் காலத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை முறைகள் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்பொழுது அதிநவீன சிகிச்சை முறைகள் வளர்ந்துள்ளது.
குறைந்த விலையில் மருத்துவம்: தற்பொழுது சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளும் உள்ளது. குறிப்பாக புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய நோய் போன்ற முக்கியமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அனுபவம் ரீதியான மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்.
சர்வதேச அளவில் மிகவும் குறைந்த விலையில் சிகிச்சை வழங்கப்படுவதால், மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். சென்னையில் மருத்துவத்திற்கான அனைத்து வசதிகளுடன் சர்வதேச மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.