திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வளர்ப்பு பறவைகள் அனைத்தையும் கொன்று அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவைக் காய்ச்சலால் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடுவதில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் காரணமற்ற பதற்றம் தேவையில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சமைக்காத இறைச்சி, முட்டை போன்றவற்றால் தான் பாதிப்பு என கூறப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) தரவுகளின்படி, 73.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் அழிக்கப்படும் என்பது நிரூபனமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே முறையாக சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டையில் வைரஸ்கள் உயிரோடு இருக்க முடியாது. எனவே பறவைக் காய்ச்சல் குறித்து நுகர்வோர் அச்சப்படத் தேவையில்லை.
பொதுவாகவே பறவைக் காய்ச்சல் H5N1 வைரசால் பாதிக்கப்பட்ட கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திவிடும். எனினும், நோய் தாக்கிய சில நாட்களில் முட்டையிட்டிருந்தால், முட்டையிலும் வைரஸ் இருக்க வாய்ப்பு உள்ளது. முறையாக சமைப்பது இந்த முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள வைரசை செயலற்றதாக்கி விடும்.
என்ன செய்யக் கூடாது? :
- ஆஃப் பாயில் எனப்படும் அரை வேக்காடு முட்டையை உண்ணாதீர்கள்?
- சரியாக வேக வைக்கப்படாத கோழி இறைச்சியை சாப்பிடாதீர்கள்
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறவைகளை நேரடியாகத் தொட வேண்டாம்
- செத்து விழுந்த பறவைகளை வெறும் கையால் தொடாதீர்கள்
- பச்சை இறைச்சியை வெறும் கையால் தொட வேண்டாம்.
இதையும் படிங்க: மரம் போடும் முட்டை: சைவ முட்டை பழத்தின் அசாத்திய பலன்கள்.!
என்ன செய்யலாம்?
- 70 டிகிரி செல்சியசுக்கு மேல் சூடு செய்யும் போது 30 நிமிடங்களில் வைரஸ்கள் கொல்லப்படும்.
- பச்சை இறைச்சியை கையாளும் போது முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து கொள்ளுங்கள்
- அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்
- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்
- கோழி இறைச்சி முட்டை சார்ந்த பொருட்களை சமைத்த பிறகே சாப்பிடுங்கள்.
- இறைச்சியை சமைக்கும் போது, அதன் அனைத்து பகுதிகளும் முழுமையாக வெந்துள்ளதா என உறுதி செய்ய வேண்டும். (இறைச்சியின் பிங்க் நிறம் மாறியிருக்க வேண்டும்)
- பாதிக்கப்பட்ட பறவையின் முட்டை ஓடு, வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என அனைத்திலுமே வைரஸ் இருக்கலாம். குளிர் பதனப்பெட்டியின் ஃப்ரீசரில் வைத்தாலும் வைரஸ்கள் கொல்லப்படாது. 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், இந்த வைரஸ் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழும். 32 டிகிரி வெப்பநிலையில் ஒரு வாரத்திற்கு தாக்குபிடிக்கும்.
- முட்டையை பயன்படுத்தும் முன்பாக பறவை எச்சம் ஏதேனும் இருந்தால் முறையாக கழுவ வேண்டும்.
- நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்கும் போது முறையாக சமைக்கப்பட்ட உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இறைச்சியை வாரக்கணக்குல ஃபிரிட்ஜில எடுத்து வெச்சு சாப்பிடுறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க.!
பறவைக் காய்ச்சலில் நிறைய வகைகள் இருந்தாலும் H5N1 வகையானது பொதுவாக அதிகமாக காணப்படுகிறது. 1997ம் ஆண்டு ஹங்காங்கில் முதன்முறையாக மனிதர்களை இந்த வகை வைரஸ் தாக்கியது. பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையை கையாளும் போது இது மனிதர்களுக்கு பரவியது. எனினும் இது வரையிலும் மனிதர்களிலிருந்து, மனிதருக்கு பரவியதாக ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவத்துறை, பாலில் H5N1 வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறவைகள் மூலம் பரவும் என்றாலும் விலங்குகள் மற்றும் மனிதர்களிலும் இந்த காய்ச்சல் குறிப்பிடத் தக்க உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். 1997 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் மனிதர்களில் 907 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 483 பேர் உயிரிழந்தனர்.