ஹைதராபாத்: தோல் மற்றும் அதன் கீழ் திசுக்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் செல்லுலிடிஸ் (cellulitis) ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், செல்லுலாய்டிஸைக் கவனிக்காமல் விடும்போது உறுப்பு துண்டிப்பு மற்றும் தீவிரமானால் உயிர் இழப்பு கூட நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லுலிடிஸ் என்றால் என்ன?: இவை, பாதித்த பகுதிகள் சிவந்தும் வீங்கியும் காணப்படுவதோடு கடுமையான வலியையும் உண்டாக்குகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus) மற்றும் ஸ்டாபிலோகோகஸ் (Staphylococcus) என்ற பாக்டீரியா தொற்று காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பித்திலேயே இதை முறையாக கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட்டால் மோசமான விளைவுகளை தடுக்கலாம்.
கால் அகற்றம்?: சமீபத்தில் வெளியான அறிக்கைப்படி, கரீம்நகர், சிரிசில்லா மற்றும் வாரங்கல் போன்ற மாவட்டங்களில் இந்த நோய் பரவல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கரீம்நகரில் மட்டும், சுமார் 150 வழக்குகள் பதிவாகியுள்ளது என்கின்றனர். இந்த நோயை ஆரம்பத்தில் குணப்படுத்தாமல் விட்ட ஒரு பெண்ணின் கால்கள் அகற்றப்பட்டதோடு, மற்றொரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்லுலிடிஸ் அறிகுறிகள்:
- செல்லுலைடிஸ் உடலில் எந்த பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக, கை,கால்,பாதம் ஆகிய பகுதிகளையே அதிகம் தாக்குகின்றன. சில சமயங்களில் கண்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதிக்கிறது.
- பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பு நிறமாக மாறி வீங்கியிருக்கும்
- வீக்கம் படிப்படியாக அதிகரிக்கிறது மற்றும் உடலின் மற்ற பாகங்களை விட வெப்பமாக உணரும்
- பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு அல்லது புண்
இது எப்படி பரவுகிறது?:
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் ஸ்டாபிலோகோகஸ் போன்ற பாக்டீரியாவால் இந்த நோய் பரவுகிறது. குறிப்பாக, வெட்டுக் காயங்கள் அல்லது தோல்கள் சிராய்கள் இருப்பவர்களுக்கு இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீர் அல்லது சுகாதாரமற்ற நிலையில் நிற்பதாலும் மழைக்காலங்களில் கொசு கடிப்பதாலும் நோய் தொற்று ஏற்படுகிறது.
அதிக பாதிப்பு யாருக்கு?: இந்த தொற்று வயது வித்தியாசமின்றி பரவுவதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, டயாபடீஸ் நோயாளிகள் மற்றும் கால்களில் வீக்கத்தோடு கூடிய வெரிகோஸ் வெயின் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முன்னெச்சரிக்கை என்னென்ன?:
- கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்
- யானைக்கால் (Filariasis) மற்றும் சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அரிப்பு ஏற்படும் பகுதிகளில் சொறிவதைத் தவிர்க்கவும், இது நிலைமையை மோசமாக்குகிறது
- மழைக்காலத்தில் செல்லுலாய்ட்டிஸ் பரவ வாய்ப்புகள் அதிகம்
- நோய்த்தொற்று உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாமல், செப்டிக் ஆகாமல் இருக்க உடனடியாக சிகிச்சை பெறவும்.
- சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்
Antibiotics போதுமா?: செல்லுலைடிஸ் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் ஆண்டிபயாடிக்ஸ் மூலம் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர். தாமதமானால் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லும் என்கின்றனர். காந்தி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவீன் குமார், செல்லுலைட்டிஸை வலிநிவாரணிகள் அல்லது களிம்புகளால் குணப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Antibiotics) சரியான பயன்பாடு செல்லுலிடிஸைக் குணப்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கிறது. சுயமருந்துகளை நாடாமல், மருத்துவ உதவியை பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியவர் ஆரம்பகால தலையீடு கடுமையான சிக்கல்களைத் தடுக்கிறது என்பதை அடிக்கோடிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: மட்டன் பிரியரா நீங்கள்?..சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்