சென்னை: மாதா பிதா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைp பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'.
நம் மக்களின் அழகான வாழ்வியலுடன் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், "இந்த மேடை மிக முக்கியமானது. வெற்றி பெற்றவர்களை பற்றி பேசும் மேடையை விட வித்தியாசமான மேடை எனக் கருதுகிறேன். அதற்கு காரணம், மாப்பிள்ளை குகன் தான். அவருடன் பழக ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை ஒரு வெள்ளந்தியாக உற்சாகமாக இயங்கும் மனிதனாகவே அவரைப் பார்த்துள்ளேன்.
அவரது அயராத உழைப்பு தான் அவருக்கு இந்த உயரத்தை, மேடையைத் தந்துள்ளது. பல கஷ்டங்களுக்கு இடையில் இந்தப் படத்தை எடுத்துள்ளார். எத்தனை பிரச்னை என்றாலும் குகன் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கும். சினிமா எல்லோருக்கும் வெற்றியைத் தந்து விடுவதில்லை. ஆனால், அதில் விடா முயற்சியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் குகன். உழைப்பவன் என்றும் தோற்பதில்லை, வாழ்த்துகள்” என்றார்.
குகன் சக்கரவர்த்தியார் பேசியதாவது, "எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன், அது தான் இப்படம். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், அப்துல் கலாம் என அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப் படம். அப்துல் கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. என்னை மாதிரி வாழாதீர்கள், இவர்கள் மாதிரி வாழுங்கள் என சொல்வது தான் வங்காள விரிகுடா குறுநில மன்னன்.
இந்தப் படத்தில் முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள். ஆனால், அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். கருணாநிதி பேசிய இந்த மேடையில் நானும் இன்று பேசுகிறேன் என்பதே எனக்கு பெருமை தான்.
காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது. படம் நன்றாக இருந்தால் நீங்கள் பாராட்டுவீர்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. நான் உழைக்கிறேன், பிழைக்கிறேன், வாழ்த்துக்கள், நன்றி" என்றார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 21 கலைகளையும் கையாண்டு ஒருவர் படம் எடுப்பது என்பது இதுதான் முதல்முறை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷியாவில் ஜாலியாக விளையாடும் நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ! - Actor Vijay Playing In Russia