திருநெல்வேலி: தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த பல திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி சாதனைப் படைத்துள்ளது. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் அனைத்து தரப்பிலிருந்தும் இவருக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் உருவானார்கள்.
அந்த வகையில், நடிகர் எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம், கடந்த 1973ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. குறிப்பாக இத்திரைப்படம், 200 நாட்களுக்கும் மேலாக திரையங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
படத்தில் வரும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகளில், திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு ஒலிக்கப்படும் பாடல்களில், இந்த பாடல் இடம்பெற தவறியதே இல்லை. அதேபோல், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு பெரிதும் உதவிய சினிமா பாடல்களில் ஒன்றான, 'நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' என்ற பாடலும், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. 50 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மீண்டும் திரையிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக பழைய சினிமாக்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நெல்லை ரத்னா திரையரங்கில் டிஜிட்டல் முறையில் நேற்று (மார்ச் 17) சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டது. நேற்று விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை) நாள் என்பதால், நூற்றுக்கணக்கான மக்கள் மிக ஆர்வமுடன் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை காண குவிந்தனர்.
ஒரு கட்டத்தில், திரையரங்கம் முழுவதும் இருக்கைகள் நிரம்பி காட்சி ஹவுஸ்புல் ஆனதால், திரையரங்கின் வெளியே ஹவுஸ்புல் போர்டு வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இத்திரைப்படத்திற்கு ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள சம்பவம் சினிமா பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2k கிட்ஸ் வாழும் இந்த நவீன காலத்தில் வெளியாகும் பல்வேறு புதுப்புது திரைப்படங்கள் கூட திரையரங்கில் ஹவுஸ்புல் ஆவது கடினம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ் புல்லாக ஓடி வரும் சம்பவம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியிலும், பழைய படங்களை விரும்பும் பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவேக் பிறந்தநாள்; விவேக் உருவத்தை அப்துல் கலாம் படத்தைப் பயன்படுத்தி வரைந்த ஓவியர்!