சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில், விஜய் நடித்த படங்களும், அவரின் செயல்பாடுகளும் அவரின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய் நேற்று (பிப்.2) 'தமிழக வெற்றி கழகம்' என்னும் தனது அரசியல் கட்சியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஜய்க்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த அறிவிப்பு வெளியான மறுகணமே, வாழ்த்துக்களை வாரித் தெளித்த திரைப் பிரபலங்களில், திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர்.
திரைப் பிரபலங்கள் பலரும் நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தாலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வாழ்த்து, ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், நடிகர் விஜய் தான் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு படத்தின் படப் பணிகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இன்றி முடித்து விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்.
அந்த வகையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (Goat) படத்தை வரும் மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட்டு, இந்த ஆண்டு இன்னொரு படத்தையும் (தளபதி 69) முடித்து, பின்னர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே விஜய்-க்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, தளபதி 69 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் "தளபதி 69-க்காக காத்திருக்கிறோம் கார்த்திக் சுப்பராஜ். தளபதி 69 மூலம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுங்கள்" போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளர். அதில் அவர், "தமது அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் தோழா. தங்களது இந்த புதிய பயணத்தில் வெற்றியடைய நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது உற்சாகத்தைப் பகிர்ந்து, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் உடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களான தெறி (2016), மெர்சல் (2017), பிகில் (2019) உள்ளிட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லியும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன், தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் ஆகிய இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, நடிகை கஸ்தூரி சங்கர், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனியும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படப்பிடிப்பில் விஜய் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இந்த திரைப்படம் ஒரு அறிவியல் புனைக்கதை என்றும், இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் நடிகை சினேகா, யுவன் ஷங்கர் ராஜா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, வைபவ், மோகன், ஜெயராம் மற்றும் அஜ்மல் அமீர் ஆகியோர் நடிக்கின்றனர். விஜயின் அரசியல் பயணம் மற்றும் அவரது சினிமா முயற்சிகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களையும், தொழில் துறையினரையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: “தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கருத்து கூறியதே இல்லை” - தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்!