சென்னை : பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவ.09) இரவு சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். இரவு 11.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த செப் 8ம் தேதி 68வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலை உலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
டெல்லி கணேஷ் அவருக்கு விருது வழங்குவதற்கு முன்பாக அவரது சினிமா பயணம் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த வீடியோவை தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு: சாலமன் பாப்பையா நேரில் அஞ்சலி!
அந்த விழாவில் டெல்லி கணேஷ் பேசியதாவது, "நடிகர் சங்கம் எனக்கு இந்த பரிசு கொடுத்ததை விட விஜயகுமாரி அம்மாளுக்கு பரிசு கொடுத்து, அவங்க பரிசு வாங்கும் போது நான் வாங்குற பாக்கியம் தான் எனக்கு பெரிது. நடிகர் சங்கம் நிர்வாகிகள் எல்லோரும் வீடு தேடி வந்து சொன்னார்கள்.
அவர்கள் வீடு தேடி வரவேண்டிய அவசியம் இல்லை. சீனியர் ஆர்டிஸ்ட்டை எப்படி கெளரவிக்கனுமோ அந்த மாதிரி கெளரவப்படுத்தினார்கள். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்து கிரகப்பிரவேசம் நடத்தும் வரை இவர்கள் தான் பொறுப்பில் இருக்க வேண்டும்.
நடிகர் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டினால் தான் கல்யாணம் முடிப்பேன் என்று சொல்கிறார். இதற்காக சீக்கிரம் விஷாலுக்கு கல்யாணம் முடிய வேண்டும். தற்போது இருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள் கையால் தான் சங்க கட்டிடம் ரிப்பன் வெட்டி திறக்க வேண்டும்" என்று பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்