சென்னை: தமிழ் சினிமாவில் உணர்ச்சிமிக்க படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் இயக்குநர் சேரன். பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தற்போது சேரன் இயக்கியுள்ள ஜர்னி (journey) என்ற இணைய தொடர் சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தை சேரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் ராமதாஸ் வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸின் பிறப்பு, மருத்துவ படிப்பு, அரசியல் வாழ்க்கை என அனைத்தும் இதில் இடம் பெற உள்ளது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை முதலில் வெங்காயம், பயாஸ்கோப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்திலிருந்து இருந்து தான் விலக்கிவிட்டதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து யாரும் என்னை தொடர்பு கொண்டு மன உளைச்சல் தர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “மருத்துவர் ஐயா வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் வேலையை தொடங்கிய போது இது வெறும் ஆவணப்படமாக மட்டுமே நின்று விடக்கூடாது, திரைப்படமாகி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்று அவரிடம் சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினேன்.
அதற்காக அவர் பிறந்த கீழ்சிவிறி கிராமத்தில் தொடங்கி, அவர் இன்று வரை பயணித்த அத்தனை ஊர்களுக்கும் சென்று அவர் சந்தித்த (இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்) அனைவரையும் சந்தித்து அவருடன் தைலாபுரம் தோட்டத்தில் பல நாட்கள் தங்கி அதை திரைப்படத்திற்கான கதையாக உருவாக்கினேன்.
ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு நாளும் அவருடன் தொலைபேசியில் பேசி பல்வேறு நினைவுகளை கதையில் காட்சியாக சேர்த்தேன். படம் தொடங்க இருந்த வேளையில் ஒரு சிலர் செய்த நல்ல காரியங்களால் நான் அதிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இப்போது முற்றிலும் அந்த படத்திலிருந்து விலகி என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவர் ஐயா படம் தொடர்பாக சமூக வலைதளங்களில், செய்தித்தாளில் செய்தி வரும் போதெல்லாம் அது தொடர்புடையவர்கள் என்னை தொடர்பு கொண்டு நிலவரம் விசாரிப்பது எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. தயவுசெய்து அது குறித்து பேச யாரும் என்னை அழைக்க வேண்டாம்.
மூன்றாண்டுகள் வீணாகிப் போனதாக நண்பர்கள் சொல்கிறார்கள். இல்லவே இல்லை. அந்த மூன்று ஆண்டுகள் என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்வேன். மருத்துவர் ஐயா தன் பயோபிக் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதே மாதிரி படம் உருவாகி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!