சென்னை: நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார், தமிழில் அறிமுகமாகும் ‘ரெக்கார்ட் பிரேக்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (பிப்.28) நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் நிஹார், நாகர்ஜூனா, சத்யா, நடிகை ராக்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ரெக்கார்ட் பிரேக்'. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரித்து, இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி, பெங்காலி மற்றும் ஒடியா ஆகிய 8 மொழிகளில் வெளியாகிறது. நடிகர் நாகர்ஜூனா, ராக்தா இப்திகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜூனா பேசுகையில், "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார்.
நடிகர் நிஹார் பேசும்போது, "இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனால்தான் தமிழ், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் இந்த படத்தை வெளியிடுகிறோம். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்" என்றார்.
இயக்குநர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசும்போது, “சென்னை விஜயா கார்டனில்தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. இந்த படத்தின் கதை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் சார் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். கரோனா காலத்தில் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
'பிச்சைக்காரன்' படம் வெளியான சமயத்தில், விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு 'பிச்சக்காடு' என பெயர் வைத்து வெளியிட்டார். படம் தமிழை விட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல, 'ஹனுமன்' படமும் ரூ.20-30 கோடி எடுக்கப்பட்டு, பல மொழிகளிலும் சேர்த்து ரூ.500 கோடி வசூல் செய்தது. அதேபோலதான் இந்த படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து, எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: காந்தாரி; முதன்முறையாக இரட்டை வேடத்தில் களமிறங்கும் ஹன்சிகா!