சென்னை: பெண்ணின் மனதை தொட்டு, தேவதையை கண்டேன், பேரரசு போன்ற திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் M.காஜா மைதீனின் 'ரோஜா கம்பைன்ஸ்' நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது.
இந்நிலையில் மைனா, கும்கி போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில், இசையமைப்பாளர் டி.இமான் இசையில், பழம்பெரும் நடிகர் விஜயகுமார் பேரனும், நடிகர் ஆகாஷ் மகனுமான விஜய் ஶ்ரீஹரி கதாநாயனாக அறிமுகமாகிறார்.
'மாம்போ' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சிங்கத்தை வைத்து படமாக்கக்கப்பட்ட முதல் ஆசிய திரைப்படம் என ப்டக்குழு அறிவித்துள்ளது. 'மாம்போ' திரைப்படத்தின் முதல் தோற்றம் (first look) மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் காஜா மைதீன், "எங்களது அழைப்பை ஏற்று வந்திருக்கும் நண்பர்கள், திரையுலகினர், மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார். தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, "தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் எனும் திரைப்படத்தை தந்தது மட்டுமல்லாமல், அவர் படம் தயாரித்துக் கொண்டிருந்த காலம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக இருந்தது.
100% சினிமாவை நேசிக்கக் கூடிய, வேட்கை கொண்ட, போராட்ட குணமுடைய தயாரிப்பாளர்களால் மட்டுமே இங்கு நீடித்திருக்க முடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் நண்பர்கள் சந்தித்துக்கொண்ட தருணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அவரது தயாரிப்பு நிறுவனம் ஒரு குடும்பம் போன்றது.
அதில் நாங்கள் எல்லாம் ஒரு குடும்ப உறுப்பினர்களாக என்றுமே இருப்போம். நல்ல சிறந்த கதையம்சம் கொண்ட வித்தியாசமான திரைப்படத்தை தரக்கூடிய தலைசிறந்த இயக்குநர் பிரபுசாலமனுடன் இணைந்து தனது தயாரிப்பை மீண்டும் துவங்கி உள்ளார். தயாரிப்பாளர்களின் இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் போன்றவர்களால் தான் தயாரிப்பாளர்கள் இன்னும் தங்கள் பயணத்தை தெடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
'லயன் கிங்' உலக அளவில் வெற்றி அடைந்தது போல இந்த 'மாம்போ' திரைப்படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது, "இயக்குநர் பிரபு சாலமன் மிருகங்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதே போல இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
படத்தின் தயாரிப்பாளருக்கும் எனக்கும் 24 ஆண்டு கால பழக்கம் உள்ளது. பிரபு சாலமன் படைப்புகள் அனைத்தும் இயற்கையோடு இணைந்தவையாக இருக்கும். டி.இமானும் புதுமையான விதத்தில் முதல் தோற்றக் காணொளியுடன் தனது இசைக்குழுவையும் வாசிக்க வைத்தது, சிறப்பாக இருந்தது. இந்த 'மாம்போ' திரைப்படம் வணிக ரீதியில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தனுஷ் திரை வாழ்வில் மைல் கல்லாக அமையுமா ராயன்? சிறப்பு பார்வை! - Raayan advance booking