சென்னை: நயன்தாரா ’நானும் ரௌடி தான்’ பட விவகாரத்தில் தனுஷ் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை பேசு பொருளாகியுள்ளது. நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் அவரது பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த ஆவணப் பட டிரெய்லரில் ’நானும் ரௌடி தான்’ படத்திலிருந்து சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டது.
நானும் ரௌடி தான் படத்தின் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இப்பட காட்சிகள் பயன்படுத்தப்பட்டது. தனுஷ் நானும் ரௌடி தான் படத்தை தயாரித்த நிலையில், அந்த காட்சிகள் பயன்படுத்தியதற்காக நயன்தாராவிடம் 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தனுஷிற்கு கண்டனம் தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் உண்மையான முகம் வெளி வந்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பேசிய வீடியோவுடன், “வாழு வாழ விடு, இவ்வளவு நாள் அனைத்து பேச்சையும் நம்பியிருக்கும் அப்பாவி ரசிகர்களுக்காக இதைச் சொல்கிறோம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் இன்பத்தை காணும் வகையில் மக்கள் மாற வேண்டுமென கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் பழிவாங்கும் மனநிலை, போலியான மேடைப்பேச்சு... நயன்தாரா பரபரப்பு அறிக்கை!
மேலும் தனுஷ் அனுப்பிய நோட்டீஸையும் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்வதி நாயர், கௌரி கிஷன், மஞ்சிமா மோகன், ஐஷ்வர்யா லஷ்மி, அனுபமா, ஸ்ருதி ஹாசன், நஸ்ரியா உள்ளிட்ட பல நடிகைகள் நயன்தாரா பதிவுக்கு லைக் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்