சென்னை: கடந்த வருடம், நடிகர் ப்ரஜின் நடிப்பில் 'டி 3' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கினார். இந்த படத்தை மனோஜ் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தைத் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் ரூ.4 கோடி தயாரிப்பாளர் மனோஜ் பெற்றுள்ளார். படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தமும் செய்துள்ளார்.
ஒப்பந்தத்தை மீறிப் படத்தை வெளியிட்டதாகக் கூறி சாமுவேல் காட்சன் தொடர்ந்த வழக்கில், 'டி 3' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடை விதித்த உயர் நீதிமன்றம், படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதாகக் கூறி, பட இயக்குநர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆஜரான இயக்குநர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறிப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த ஆடு ஜீவிதம்! வசூலி மஞ்சுமெல் பாய்சை பின்னுக்குத் தள்ளி சாதனை! - The Goat Life Movie Cross 100 Crore