சென்னை: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக கொண்டாடப்பட்டவர் கார்த்திக். அவரது மகன் கௌதம் கார்த்திக் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பத்து தல' மற்றும் 'ஆகஸ்ட் 16, 1947' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றது.
Happy to be associated with @MGstudios2024 for my next 😊🙏🏻
— Gautham Karthik (@Gautham_Karthik) September 12, 2024
Produced by @APVMaran & @ganeshkbabu
Dialogues by @Dir_Rajumurugan
Written & Directed by @DhinaRaghavan #GK19 pic.twitter.com/Op0bLmhUfo
தற்போது கௌதம் கார்த்திக் 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என்ற 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எளிய மக்களின் வாழ்வியலையும், அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இயக்குநர் ராஜூ முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தீனா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் தீனா ராகவன் கூறும் போது, "தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலைச் சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம்.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு GK 19 என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலைப் படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். மேலும், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.