சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சர்வதேச அளவில் படக்குழுவினர் புரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “சேனாபதி கதாபாத்திரம் உருவாக்க கமல்ஹாசன், அவரது தந்தை மற்றும் அவரது சகோதரர் போட்டோ கொடுத்து தோட்டாதரணி கிட்ட ஸ்கெட்ச் போட்டு கொடுக்க சொன்னேன். பயங்கர சிலிர்ப்பாக இருந்தது. 28 வருடம் கழித்து மீண்டும் அதே சிலிர்ப்பு.
கமல்ஹாசனைத் தாண்டி இந்தியன் தாத்தா அந்த செட்டில் இருப்பது போல் இருக்கும். ஒரு கதைக்கு தேவையான காட்சிகள் இருப்பது உண்மை. இந்தியன் படம் எடுக்கும் போது, இந்தியன் 2 பண்ணுவேன் என்று நினைக்கவே இல்லை. அதை இத்தனை வருஷம் கழிச்சு எடுப்பேன் என்றும் நினைக்கவில்லை. சேனாபதியும் வர்மக்கலையில் ஒரு கிராண்ட் மாஸ்டர். சூப்பர் மேனுக்கு வயது கிடையாது. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை ஒழுக்கமும், நேர்மையும் தான். அதுவே இந்த பாகத்திற்கு அடித்தளம்.
சேனாபதி கதாபாத்திரம், நமது ஒவ்வொரு மனதிற்குள் இருக்கும் கோபம், ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் அது. இந்தியன் 1 பண்ணும் போது, அந்த காட்சி எடுப்பது ரொம்ப கஷ்டம். ஆனால், இந்தியன் 2ல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2-ல் கமல்ஹாசன் சாரின் முகபாவத்தை சரியாக பார்க்க முடியும். இதில் நிறைய கதாபாத்திரம் மற்றும் கேமியோக்கள் இருக்கிறார்கள். எல்லா குடும்பமும் கொண்டாடும் படமாக இருக்கும். தராசின் ஒரு பக்கத்தில் படத்தின் அனைத்து கலைஞர்களையும் வைத்தால் மற்றொரு தராசில் கமல்ஹாசனை வைத்தால் சரியாக இருக்கும்.
ஒரு படம் முடிந்து தான் அடுத்த படம் எடுக்க வேண்டும் என்பது என் பாலிசி. ஆனால், சூழ்நிலை காரணமாக அடுத்தடுத்து படம் எடுக்க வேண்டிய சூழல். கரோனா காலம் வந்த போது படத்தை பற்றி நிறைய ஒர்க் பண்ணேன். சமூக வலைத்தளத்தில் வரும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். நெகட்டிவாக வரும் போதும் புரிந்து கொள்ள வேண்டும். 90ஸ் கிட்ஸ் முதல் பாகத்தை பார்க்காமல் வராவிட்டாலும் இந்த படம் ஹிட் ஆகும். நிறைவேறாததை விட நிறைவேறிய விஷயங்களை வைத்து சந்தோஷப்படுகிறேன்.
இந்தியன் 2 தான் சேலஞ்ச். முதல் பாகம் வந்தாச்சு. எல்லாமே பார்த்திருப்போம். அப்படியிருக்க, இரண்டாம் பாகத்தில் என்ன காட்டுவது என்பது தான் சவால். இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் கதை விரிகிறது. 2.0 படம் முடிந்து, சிஜி சரியாக பண்ண முடியவில்லை. பிறகு முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால் அதே நேரத்தில் இந்த கதை ரெடியாகி விட்டது. அந்த படத்தின் பின்னணி இசை ரொம்ப கஷ்டம். அப்போது பாட்டுக்கும் இசை வேண்டும் என்று சொல்லும் போது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் அனிருத்தை வைத்து பண்ணியுள்ளோம்.
செய்தித்தாள்களை படித்தாலும் நிறைய ஊழல் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்தியன் 1 மற்றும் 2 வரும் போது எதுவும் மாறவில்லை. லஞ்சம் லஞ்சம் தான். பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் போது, சில சான்றிதழ்கள் வாங்க லஞ்சம் தருவதை பார்க்க முடிந்தது. அது என்னை பாதித்தது" என்றார்.