சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படுபவை. அப்படி அவர் கடந்த 2010ஆம் ஆண்டு சோழர்கள் பற்றி எடுத்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்போது அனைவராலும் கொண்டாடப்படும் இந்த படம் வெளியான நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில், இப்படம் குறித்து செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “நிறைய பேர் என்னை ஆயிரத்தில் ஒருவன் பற்றி பேசச் சொன்னார்கள். எனக்கு பேசத் தோன்றவில்லை. அப்படம் கொடுத்த ரணங்கள், மனது முழுக்க காயங்கள், தழும்புகள் என்றுமே வலித்துக் கொண்டேதான் இருக்கும். பேசத் தோன்றவில்லை. அவ்வளவு வலி யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பிக்கும் போது ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து தொடங்கினேன். தொடங்கிய உடனே நல்ல விஷயம் தெரிந்தது. அதில் ஈடுபட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே உயிரைக் கொடுத்து உழைக்கும் கோல்டன் டீம் கிடைத்தார்கள் என்பதில் சந்தோஷபட்டோம். எல்லோரும் சேர்ந்து உழைக்க, உழைக்க அது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்துடன் பாம்புகள், தேள், அட்டைகள் கஷ்டத்துக்கு நடுவில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடந்தது. பாதி படம் முடியும் போது எனக்கு நன்றாக தெரிந்தது, அந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்று. உடனே, தயாரிப்பாளரை அழைத்து படம் வேற மாதிரி போகிறது, உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. நானே தயாரித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என்றேன்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் நல்ல மனிதர். இப்படத்தை நான் தான் பண்ணுவேன் என்று மீண்டும் ரூ.5 கோடி கொடுத்தார். அதன் பிறகும் இன்னும் செலவாகும், இனியும் தயாரிப்பாளரைக் கேட்பதில் நியாயமில்லை என்று நானே வட்டிக்கு கடன் வாங்கி மீதி படத்தை முடித்தேன்.
முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்சன் ரொம்ப கஷ்டப்பட்டோம். குறிப்பாக, விஎஃப்எக்ஸ் நானும், செந்தில் என்பவரும் இரவு பகலாக போராடினோம். ஏனென்றால், இது புது கான்செப்ட். எத்தனையோ இரவுகள் தூங்காமல் போய் உள்ளது. அங்கேயே இருந்து படத்தை முடித்தோம்.
படம் வெளியான தருணத்தில் ஒவ்வொருவரும் அதை குத்திக் குத்திக் கிழிக்கிறாங்க. ரத்த ரத்தமாக துண்டு போடுகிறார்கள். இவன் யாரு இப்படி எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். எதனால் இப்படி நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாட்கள் போகப்போக எதிர்ப்புகள் சேர்ந்து கொண்டே போகிறதே தவிர, குறையவில்லை. தெலுங்கில் ரிலீஸ் செய்தோம், அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கு சென்று படத்தை புரொமோட் செய்தோம்.
அப்போது கூட எனக்கு வலி. எனக்கு கூட வேண்டாம். இதில் உழைத்த கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே போய்விட்டதே. குறிப்பாக, கேமராமேன் ராம்ஜி சொல்லலாம். இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தூங்கவே இல்லை. இந்த படத்தோட வாழ்ந்தார் என்று சொல்லலாம்.
இவர்களுக்கு ஒருத்தரும் ஒரு அங்கீகாரம் கொடுக்கவில்லையே என்று இன்று வரை அழுதுகொண்டே இருக்கிறேன். இதற்கு முன் அரசர்கள் பற்றி எடுத்துக் கொண்டு இருந்தோம். நமக்கு தெரிந்ததெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் நன்றாக அலங்காரம் செய்துகொண்டு நகை போட்டுக்கொண்டு, இதில் தான் சோழர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நன்றாக ஆய்வு செய்து எடுத்தோம். கல்வெட்டுகள் ஆய்வு செய்து எடுத்த உண்மை. இப்போ எல்லோரும் சோழர் பயணம் தொடரும் என்கின்றனர். முன்னாடி ஏன் பேசவில்லை என்பது தான் இன்றைக்கும் எனக்கு சிரிப்பாக இருக்கிறது.
கார்த்தி சொன்னார், கிளைமாக்ஸ் உணர்ச்சிகரமானது சரியாக வருமா என்று சாரிடம் கேளுங்கள் என்றார். சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து எடுத்தாச்சு. ஆனால், இன்று எனக்கு புரிகிறது நம்முடைய வேதனை, பக்கத்தில் நமக்கு நடந்த கொடுமை, நிறைய தமிழர்கள் இறந்தது. அதனை யாருமே திரையில் பார்க்க விரும்பவில்லை என்று எனக்கு இப்போ நன்றாக புரிகிறது.
இப்பவும் நான் எதுவும் பெரிதாக கேட்கவில்லை. சோழர்கள் பற்றி, தமிழ் அரசர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து கார்டாவது போடுங்கள், அது ஒன்றுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "என்னம்மா கண்ணு செளக்கியமா?".. 'கூலி' படத்தில் ரஜினியுடன் இணைந்த சத்யராஜ்! - sathyaraj in coolie