சென்னை: ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபல்'. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரெபல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "ஜி.வி.பிரகாஷ் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர். இப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து இருக்கிறார். அந்த காலகட்டத்திற்கு நம்மைக் கொண்டு போகக்கூடிய படமாக ரெபல் திரைப்படம் இருக்கும்” என்றார். பின்னர் பேசிய இயக்குநர் நிகேஷ், “படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்தார். அதே போல தனஞ்செயனுக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி” எனக் கூறினார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என் வேலையை நான் சரியாகச் செய்து வருகிறேன் என நினைக்கிறேன். 'ரெபல்' படம் மூணாரில் எடுக்கப்பட்ட படமாகத் தெரிகிறது. இரு மொழி அரசியலைப் பேசும் என நினைக்கிறேன். படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன், வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ். அவருடன் தங்கலான் படத்தில் பணியாற்றி வருகிறேன். மிகவும் இயல்பான மனிதர், தங்கலான் படத்தில் அவரது உழைப்பு தெரியும். அவர் எனது தயாரிப்பில் நடித்து வருகிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கூடியவர்.
ஞானவேல் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய நபர். படம் நன்றாக வந்துள்ளது. சின்ன படங்களுக்கு உதவ வேண்டியது முக்கியமானது. சின்ன படங்களை எடுத்து திரையரங்கிற்குக் கொண்டு வருவதே மிகவும் சிரமமாக உள்ளது. எனது சமீபத்திய படம் ஜெ.பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என்றால் கேள்வியாக இருக்கிறது. ஆனால், படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது என்பதையெல்லாம் தாண்டி அது சரியான இடத்திற்குச் சென்று இருக்கிறது. எனக்கு, ஒரு சில கடமைகள் உள்ளது. அதற்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன். படம் தயாரிப்பேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை. இந்த படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தும்” என கூறினார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்தில் பணியாற்றி வருகிறேன். சர்வதேச அளவில் படம் நன்றாக வந்துள்ளது. என்னிடம் பல பேர் கேட்டு உள்ளார்கள், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்குச் செல்கிறீர்கள், சமுதாயத்தில் குரல் கொடுக்கிறீர்கள், ஆனால், படத்தில் ஏன் அரசியல் பேசவில்லை என்று கேட்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என கூறினார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இந்த படத்தில் நம்பிக்கையாக உழைத்துள்ளோம். ஆதித்யா படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். கொம்பன், டார்லிங், தங்கலான், ரெபல் உள்ளிட்ட படங்களில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாஸ்டர் சுரேஷ் டூ சூர்ய கிரண்.. ரஜினியின் சிறுவயது வாய்ப்பு கிடைத்தது எப்படி?