சென்னை: காதலிக்க நேரமில்லை படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் 'லாவண்டர் நேரமே' பாடல் இன்று வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த வணக்கம் சென்னை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் சீரியஸை இயக்கினார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'காதலிக்க நேரமில்லை' படத்தை இயக்கியுள்ளார். ரொமான்டிக் சாக்லேட் ஹீரோவாக ஆரம்ப காலகட்டத்தில் வலம் வந்த ஜெயம் ரவி, பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் முழு நீள காதல் கதையில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி கடைசியாக நடித்த 'பிரதர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜெயம் ரவி, கணேஷ் பாபு இயக்கத்தில் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். அதேபோல் திருச்சிற்றம்பலம் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நித்யா மேனன் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை; அமெரிக்கா செல்லும் நடிகர் சிவராஜ்குமார்! - SHIVARAJKUMAR HEALTH ISSUE
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் முதல் பாடல் ‘என்னை இழுக்குதடி’ பாடல் கடந்த மாதம் வெளியாகி இளைஞர்களை முணுமுணுக்க வைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் 'லாவண்டர் நேரமே' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை ஆதித்யா ஆர்.கே, அலெக்சாண்டர் ஜாய் ஆகியோர் பாடியுள்ளனர். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.