சென்னை: நடிகையும், தயாரிப்பாளருமான டாப்ஸி பன்னு, தனது நீண்ட நாள் காதலரான மதாய்ஸ் போவை விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், திருமணம் வரும் மார்ச் மாதம் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாப்ஸி பன்னு, தானிஷ் பேட்மிண்டன் பயிற்சியாளர் மதாய்ஸ் போவுடனான உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும் டாப்ஸி, தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து ஒரு நேர்காணலில் கூறும்போது, எனது திருமணத்தில் நடனத்திற்கும், உணவிற்கும் முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறி இருந்தார்.
மேலும், எனது திருமணம் ஒருநாள் நிகழ்வாக இருக்கும், இரவு முழுவதும் திருமண கொண்டாட்டங்கள் இருக்காது எனக் கூறியுள்ளார். இந்நிலையில், டாப்ஸியின் திருமணம் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மதத்தின் சடங்குகள் ஒன்றிணைத்தவாறு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடிகை டாப்ஸி, தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். டாப்ஸி கடைசியாக ஷாருக்கானுடன் டங்கி படத்தில் நடித்தார். தற்போது பிர் ஆயி ஹசின் தில்ருபா என்ற படத்தில் விக்ரந்த் மாசியுடனும், சன்னி கவுசலுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு'.. விக்னேஷ் சிவன் வரிகளில் பாடல் - பர்ஸ்ட் லுக் வெளியானது!