சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தில், வரும் நவம்பர் முதல் படப்பிடிப்புகள் நடக்காது என்று அறிவித்துள்ளது. மேலும், நடிகர் தனுஷ் மற்றும் விஷால் ஆகியோருக்கு புதிய படங்கள் நடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் நடிகர் உதயா ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் உதயா கூறியதாவது, "இது தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டும் எடுத்த முடிவு அல்ல, அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. இதற்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சந்திப்பு நடைபெற்றது, அதில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இது தன்னிச்சையாக எடுத்த முடிவாக தெரியவில்லை.
தற்போது சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை, நிதி கிடைப்பதில்லை. ஓடிடி நிறுவனங்கள் ஒரு சில படங்களை தேர்வு செய்து தான் வாங்குகின்றனர். மேலும், தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ் திரையுலகை புதுப்பிக்கத்தான் இந்த வேலை நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஒட்டுமொத்தமாக திரையுலகினை புதுப்பிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்த வருமானமும், வசூல் நிலவரம் உண்மையானதாகவும் இல்லை. தனுஷ் ஒரு தயாரிப்பாளரின் மகன். அவருக்கு தயாரிப்பாளர் வலி தெரியும். அவருடன் தயாரிப்பாளர்கள் அமர்ந்து பேசினால் பிரச்னை சரியாகி விடும். நடிகர்கள் ஒரு படம் வெற்றியடைந்தால் உடனடியாக சம்பளத்தை உயர்த்திவிடுகின்றனர்.
மேலும், நடிகர்கள் இங்கு படப்பிடிப்பிற்கு வரும் போது மும்பையில் இருந்து ஒப்பனைக் கலைஞர்களை அழைத்து வருகின்றனர். அவர்களுக்கும் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டியதாக உள்ளது. நடிகர்களின் சம்பளத்துடன் அந்த செலவும் கொண்டு வரப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் நடிகர்கள் வருமானத்தில் பங்கு வாங்குகின்றனர்.
அதேபோல் இங்கும் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நடிகர்கள் மீது புகார் தரமாட்டார்கள். ஆனால், நடிகர் சங்கத்திற்கு என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது எல்லாமே தெரியும். புகார் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களா என தெரியவில்லை.
தமிழ் திரையுலகில் ரெட் கார்டு என்பது ஒன்றும் இல்லை. இதுவரைக்கும் நான் பார்த்ததும் இல்லை. எங்களிடம் கலந்து ஆலோசித்து படம் நடிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். நிறைய நடிகர்கள் படத்திற்காக தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நடிகர்களுக்கு தற்போது மார்க்கெட்டில் டிமாண்ட் இருப்பதால் தான் அவர்கள் கேட்கிறார்கள்.
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தபோது நான் அதில் செயற்குழு உறுப்பினராக இருந்தேன். சங்கத்தின் வைப்பு நிதியை யாரும் தொட மாட்டார்கள், ஆனால் விஷால் நிர்வாகம் செய்ய தெரிவில்லை. அதே நேரத்தில் விஷாலுக்கு முறைகேடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரை மட்டும் தனிப்பட்ட முறையில் சொல்லக்கூடாது, அனைத்து சங்கங்களும் நட்புடன் தான் இருக்கிறோம். இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழலில் தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. திடீர் ஸ்டிரைக்கால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், தயாரிப்பாளர்கள் தற்போது ஒன்றுமே இல்லாமல் இருக்கின்றனர்.
தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைவரும் கஷ்டப்படத்தான் போகிறார்கள். ஆனால், சில நாட்கள் பொறுத்துக் கொண்டு இருந்தால் திரையுலகம் நன்றாக இருக்கும். தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. புதிய படங்கள் தான் தொடங்கக்கூடாது என்று கூறியுள்ளனர். நானும் பலமுறை நிர்வாகத்தில் இருந்துள்ளேன், அறிவிப்பு நன்றாக இருக்கிறது, ஆனால் செயல்படுத்துவதில்லை. இதனை ஒரு அமைப்பு ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தனுஷ், விஷாலுக்கு கிடுக்குப்பிடி.. நடிகர் சங்கத்துடன் பேச திட்டமா? தயாரிப்பாளர் திருமலை பிரத்யேக தகவல்! - Dhanush vs producers council