"துணிச்சலான கொள்கை கூட்டம் சினிமாவுக்கு வர வேண்டும்" - 'தோழர் சேகுவேரா' பட விழாவில் சத்யராஜ் பேசியது என்ன? - Actor sathyaraj - ACTOR SATHYARAJ
Actor sathyaraj: பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்கள் மிகப் பெரிய சமூக கருத்துக்களை கொண்டு வருகின்றன எனவும், இதுபோன்ற துணிச்சலான கொள்கை கூட்டம் சினிமாவுக்கு வர வேண்டும் எனவும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.


Published : Aug 10, 2024, 5:39 PM IST
சென்னை: இயக்குநர் அலெக் இயக்கியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், நடிகர் சத்யராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், "நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். அனைத்து படங்களில் நடிப்பதும் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். தந்தை பெரியாராக நான் நடித்தது தான் எனக்கு பெருமைக்குரிய விஷயம். அதற்கு பிறகு சில பெயர்களை தாங்கி நடிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.
மேலும் பேசுகையில், "எம்ஜிஆர் மகன் படத்தில் நான்தான் எம்ஜிஆர். படத்தின் கதைக்கும், எம்ஜிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தோழர் சேகுவேரா உடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அவர் மிகப் பெரிய புரட்சியாளர். தோழர் சேகுவேரா பெயரில் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. மேலும் அதே தலைப்பில் நடிப்பதும் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய திருமாவளவன் மற்றும் திராவிட கழகத் தலைவர் வீரமணி இருவருக்கும் நன்றி" எனக் கூறினார்.
தோழர் சேகுவேரா படத்தில் பாடல் பாடியது குறித்து பேசுகையில், "பல சிக்கல்கள் உள்ள படத்தில் நடித்த அனுபவங்கள் எனக்கு உண்டு. இப்படத்தில் நான் பாடிய பாடலை மிகவும் சிரமப்பட்டு பாடினேன். ஆனால் புரட்சிகரமான பாடலை பாடியது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார். மேலும், நான் புரட்சி தமிழன் அல்ல, தமிழன் மட்டுமே.
இதுபோன்ற படங்கள் வரும் போது பெரிய சமூக மாற்றம் ஏற்படும். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்கள் மிகப் பெரிய சமூக கருத்துக்களை கொண்டு வருகின்றன. இதுபோன்ற துணிச்சலான கொள்கை கூட்டம் சினிமாவிற்உக்கு வர வேண்டும்" என்று பேசினார். தோழர் சேகுவேரா திரைப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து ஹேம்நாத் விடுதலை.. வழக்கறிஞர் கூறியது என்ன? - Actress Chithra husband released