கேரளா: கேரள அரசு, நீதிபதி ஹேமா கமிஷன் மூலம் மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை வெளியானதை அடுத்து மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை வன்கொடுமை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் மலையாள நடிகர்கள் சித்திக், பாபுராஜ் ஆகியோருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் சித்திக் மலையாள நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் நடிகர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் மலையாள நடிகர் சங்கத்தில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியது.
இந்நிலையில் இன்று ஆன்லைன் மூலம் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தின் முடிவில், மலையாள நடிகர் சங்க தலைவரான நடிகர் மோகன்லால் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்க நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சங்க பணிகள் சுமூகமாக நடைபெற தற்காலிகமாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியில் தொடருவார்கள் என கூறப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் கொச்சியில் இன்று இல்லாத நிலையில், நடிகர் சங்கம் ஆன்லைன் மூலமாக இக்கூட்டத்தை நடத்தி இந்த முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: காமெடி நடிகர் முதல் பன்முக கதாநாயகன் வரை... சாதித்து காட்டிய 'பரோட்டா சூரி' - Actor soori birthday