தேனி: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஆண்டிபட்டியில் போகி பண்டிகையான இன்று (ஜனவரி 13) திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேலாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை முதல் நாள், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி14) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இதற்காக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றும், பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்குவதிலும், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள், கரும்பு ஆகியவற்றை வாங்குவதற்காகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேனி ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. ரூ.1 கோடிக்கு மேலாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
![சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-01-2025/23315488_a.jpg)
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை.. தி.நகரில் களைக்கட்டும் பர்ச்சேஸ்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் ஆட்டுச் சந்தையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இங்கு விற்பனை செய்யும் ஆடுகளை வாங்குவதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை புரிவர்.
![ஆட்டுச் சந்தையில் குவிந்த மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-01-2025/23315488_2.jpg)
இந்த நிலையில், இன்று போகி பண்டிகையன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது. அதன்படி, 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.6 ஆயிரத்திற்கும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு ரூ.8 ஆயிரத்திற்கும், 25 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு ரூ. 20 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஆடுகளை வாங்குவதற்காக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.