டெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் காலி குடங்கள், டிரெம்களை கொண்டு தண்ணீருக்காக அலை மோதுகின்றனர். அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து போதிய அளவில் டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
अनिश्चितक़ालीन अनशन का चौथा दिन- जलमंत्री आतिशी का दिल्लीवालों के लिए संदेश
— Atishi (@AtishiAAP) June 24, 2024
-Posted by Team Atishi#PaaniSatyagrah4thDay pic.twitter.com/Fc8hkdjtXB
இது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய தண்ணீர் பெற்றுத் தருமாறு ஆம் ஆத்மி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். உண்ணாவிரதம் 4வது நாளை எட்டிய நிலையில், அவரது உடல் நிலையில், மோசமடைந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேநேரம் டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, எடையும் குறைந்துவிட்டது.
மேலும், உடலில் கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது, இது நீண்ட காலத்திற்கு உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கும். என் உடல் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானாவில் இருந்து தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்று வீடியோவில் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக யமுனை ஆற்றில் இருந்து டெல்லிக்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன்கள் வரை அரியானா அரசு குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அரியானா அரசு யமுனை ஆற்றில் இருந்து வழங்க வேண்டிய நீரில் 100 மில்லியன் கேலன்களை குறைத்தால், டெல்லியில் 28 லட்சம் மக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, ஆம் ஆத்மி குழுவினர் அரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து நயப் சிங் சைனி பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்:"காங்கிரஸ் அமைதி காப்பது ஏன்? எங்களோடு போராட வாருங்கள்"- ஜேபி நட்டா அழைப்பு! - JP Nadda