பெங்களூரு (கர்நாடகா): கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடுகின்றனர். மார்ச் 6ஆம் தேதி பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் (BWSSB), குடிநீர் சம்பந்தமான புகார்களைப் பெறுவதற்கு, 1916 என்ற உதவி எண்களை வெளியிட்டிருந்தது. உதவி எண் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் புகார்கள் குவியத் துவங்கியது.
பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதால், குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளும் இயங்கவில்லை. இதனால் குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, பெங்களூரு பெருநகர மாநகராட்சி (BBMP) நடவடிக்கை எடுத்து வருகிறது.
புறநகர் பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. புறநகர் பகுதிகளில் இருந்து குடிநீர் சம்பந்தமாக பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி பகுதியில் உள்ள 35 வார்டுகளில் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் 5 ரூபாய் நாணயம் செலுத்தினால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கக்கூடிய ஆர்.ஓ., மையங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஓரளவு தண்ணீர் உள்ள போர்வெல்கள் மூலம் இயங்கும் ஆர்.ஓ. மையங்களும் குறைவான நேரமே இயக்கப்படுகின்றன. காலை, மாலையில் 2 மணி நேரமே இவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து, கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தண்ணீர் டேங்கர் மாஃபியாக்கள் டேங்கருக்கு ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதால் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இந்த சூழலில், குடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவர் வி.ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், “வாகனங்களை சுத்தம் செய்ய, தோட்டங்களைப் பராமரிக்க, கட்டுமானத் தேவைகளுக்கு, நீரூற்று உள்ளிட்டவைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.
மீறுபவர்களுக்கு குடிநீர் வாரியச் சட்டம் மூலம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்கள் மீது அபராதத் தொகையுடன் சேர்த்து, நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம், மேலும் அபராதம் விதிக்கப்படும். உத்தரவை மீறுபவர்கள் குறித்து பொதுமக்கள் வாரியத்தின் உதவி எண்ணான 1916-க்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும்.
பெங்களூருவில் நிரந்தரமாக வசிப்பவர்கள், வந்து செல்பவர்கள் என 1 கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரில் நாளுக்குநாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மழை இல்லாததால் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. நகரில் வசிக்கும் அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டியது அவசியம். அதனால், பொதுமக்கள் தண்ணீரின் அவசியம் கருதி, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கபடி ஆண்களுக்கானது மட்டுமல்ல.. கபடி அணியின் முதல் பெண் உரிமையாளர் ராதா கபூர்!