வைக்கம் (கேரளா): கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இன்றில் இருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவெறியும், தீண்டாமைக் கொடுமையும் தலைவிரித்து ஆடியது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் மட்டுமல்ல, கோயில் இருக்கும் தெருவுக்குள்ளேயே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இந்த கொடுமைகளின் உச்சக்கட்டமாக, கோயில் தெருவில் நுழைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சிலரது கண்களைத் தோண்டி, அதில் சுண்ணாம்பு பூசும் கொடூரமும் வைக்கத்தில் அரங்கேறியது. இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, எல்லோரும் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டமே வைக்கம் போராட்டம்.
இந்த வைக்கம் போராட்டம் ஆரம்பத்தில், 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி திருவாங்கூர் பகுதி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், வழக்கறிஞர் டி.கே.மாதவன் முன்னெடுத்து நடத்தினாலும் கூட, போராட்டம் தொடங்கிய சிறிது நாட்களிலேயே வைக்கம் போராளிகள் அனைவரையும் சிறையில் அடைக்கப்பட்டதால், தகுதியான தலைவர்களின்றி போராட்டம் தடைப்பட்டது.
இதன் காரணமாக, வைக்கம் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தத் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ஜோசப் கடிதம் எழுதினார். ஒரு கட்டத்தில், வைக்கம் போராட்டத்திற்கு தலமைதாங்க பெரியாருக்கும் கடிதம் எழுதினார், ஜார்ஜ் ஜோசப். இதனை அடுத்துத்தான், வைக்கம் சென்ற பெரியார், இடையில் இருமுறை கைதாகி, அடுத்தடுத்து சிறை தண்டனையை அனுபவித்தாலும் போராட்டம் வெற்றிபெறும் வரையில் அதற்காக வீரியமான பங்களிப்பைக் கொடுத்து வெற்றியும் பெற்றுத்தந்தார். இதனாலேயே அவர் 'வைக்கம் வீரர்' என்று புகழப்பட்டார்.
இத்தகைய சூழ்நிலையில், கால ஓட்டங்களின் நடுவே நூறு ஆண்டுகளை நிறைவு செய்து வைக்கம் போராட்ட நிகழ்வு இன்றளவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. இத்தகைய பெருமையுடைய வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் இன்று (டிச.12) நடைபெற்ற பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்று விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கேரளா தேவஸ்தான துறை அமைச்சர் வி.என்.வாசவன், இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் அவரது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன். வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப்போலவே பெரியார் நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்த நாள், வரலாற்றில் பொன்னாள். கேரளாவுக்கு வரும் அனைவரும் வைக்கம் பெரியார் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றை அறிய வேண்டும்.
ஒருவர் ஓயாது உழைத்து ஒரு பெரிய சமூகத்தை மாற்றிய வரலாறு தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. கேரளா காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாத காலம் வைக்கத்தில் தங்கி பெரியார் போராட்டம் நடத்தினார். கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார். பெரியாரின் வைக்கம் போராட்டம் மிகவும் முக்கியமானது என அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயில்களுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது.
யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை மக்கள் மனதில் மலர வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமல்லாமல், ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம். வைக்கம் போராட்ட விழாவை கொண்டாடுவது பெரியாரை போற்ற மட்டுமல்ல, அவர் காட்டிய வழியில் பயணிப்பதற்காகவும் தான்.
வைக்கம் போராட்டத்தில் கிடைத்தது ஒரு ஒற்றைப்பட்ட வெற்றி அல்ல. அது சமூக நீதிக்கு தொடர்ந்து கிடைத்த வெற்றிகளுக்கான தொடக்க புள்ளி. எந்த தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறியும் வலுவை மக்களிடத்தில் வைக்கம் போராட்டம் விதைத்துள்ளது. நம் தேவைகளை உயர்த்தி பிடித்து அதனை பெறும் வரை போராடுவோம். எந்த விலை கொடுத்தேனும் சமத்துவ சமநிலையை நிலைநாட்டுவோம்" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, பெரியாரின் கொள்கைகள் குறித்தும், வைக்கம் போராட்டம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விழாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.