டெல்லி: வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமமின்றி பணப்பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணையவுள்ளது. இரு நாடுகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழிநுட்பம் சேவையை நாளை (பிப். 12) அறிமுகப்படுத்த உள்ளது. அது மட்டுமல்லாமல் மொரிஷியஸ் நாட்டில் ரூபே (Rupay) கார்டு சேவையும் தொடங்கப்பட உள்ளது.
காணொளி காட்சி வாயிலாக நாளை (பிப்.12) நடைபெற உள்ள இந்நிகழ்வில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவீன் ஜெகன்நாத், இலங்கை நாட்டின் அதிபர் ரணில் விக்ரம்சிங்கே ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக 2016ம் ஆண்டு மத்திய அரசு யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகபடுத்தியது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், யு.பி.ஐ சேவையின் மூலம் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பயணிகளும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
இலங்கை மற்றும் மொரிஷியஸ் உடனான இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்புகள், வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 நாட்கள் திமுக பரப்புரைக் கூட்டம்!