கோழிக்கோடு: நாடெங்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கேரளா நாடாளுமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF), ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டம் வடகரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஷாபி பரம்பில் என்பவர் கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த கேரளா மக்களை நேற்று சந்தித்து வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவிற்கு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாருக்கு புலம்பெயர்ந்து சென்ற கேரளாவைச் சேர்ந்த வாக்காளர்களை இதற்காக அவர், சந்தித்து பேசினார். அப்போது பயணிகளை மிரட்டி அதிக விமான கட்டணம் வசூலிப்பது, உயிரிழந்தவர்களின் உடல்களை வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது போன்றவைகள் குறித்து பேசி பரப்புரை மேற்கொண்டார். மேலும் அவர், வெளிநாட்டில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்படும் விவகாரத்தில் தீர்வு காண்பேன் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பாலக்காடு எம்எல்ஏ தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்காது என பாஜக கூறுவதாகவும், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை எல்டிஎஃப் கூட்டணிக்கும் உதவாதவை என சாதாரண மக்களும் புரிந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார். பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற குறுக்கு வழியில் வாய்ப்புகளைத் தேடுவதாகவும்; ஆனால், இது வடகரையில் எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தாது எனவும், கே.கே.சைலஜா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் ஒருபோது முக்கியத்துவம் அளிக்காது எனவும் தெரிவித்தார்.
வடகரை நாடாளுமன்ற தொகுதி என்பது குடியுரிமை இல்லாதவர்களின் வாக்குகளை முக்கியத்துவமாகக் கொண்டதாக உள்ளது. இந்நிலையில், அதிக விமான கட்டணம் வசூலிப்பதனால், அங்குள்ள புலம்பெயர்ந்த கேரளா மக்கள் வாக்களிப்பதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, வாக்குரிமையின் அவசியம் குறித்து எடுத்துரைத்து இத்தேர்தலில் வாக்களிக்க வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே, கேரளாவிற்கு வந்து வாக்களிக்க வைக்கும் முயற்சியில் யுடிஎஃப் கூட்டணி சார்பில் ஒரு சிறப்பு விமானத்தையும் வாடகைக்கு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை! - Delhi Excise Policy Scam