டெல்லி: தலைநகர் டெல்லி, துவார்கா பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு குழுவினர் உடனடியாக பள்ளிக் விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே மாணவ மாணவிகள் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி பப்ளிக் பள்ளி உள்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இமெயில் மூலமாக பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு வீரர்களும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே இமெயில் முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது அனைத்து தனித் தனி முகவரிகளா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாணவ, மாணவகளின் பாதுகாப்பை கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பெற்றோர் பயப்பட வேண்டாம் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து இதுவரை எந்த மர்ம பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்றும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ! மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு மேலும் பின்னடைவு! - Lok Sabha Election 2024