மும்பை: பத்தாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கி கடந்த மாதம் அந்த நாட்டின் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. இதனைத் தொடர்ந்து சில வளர்ச்சி அடைந்த நாடுகளும் வட்டிவிகிதங்களை குறைத்தன. எனினும் இந்தியாவில் வட்டிவிகிதங்களைப் பொறுத்தவரை முந்தைய நிலையே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போதைய நிதி ஆண்டுக்கான இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் நான்காவது நிதிக் கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், "நிதி கொள்கை கமிட்டி, ரெப்போ விகிதமான 6.5 சதவிகிதத்தில் எந்தவித மாற்றமின்றி தொடருவது என தீர்மானித்துள்ளது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆர்பிஐ வட்டி விகிதங்களில் மாற்றமின்றி அதே நிலையில் தொடர்கிறது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருக்கும் நிலையில், உயர்ந்துள்ள உணவுப் பணவீக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது,"என்றார்.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏதும் இல்லாத நிலையில் கடன்கள் மீதான வட்டி விகிதங்களில் ஏதும் மாற்றம் இருக்காது என்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நிதி கமிட்டியில், ராம் சிங், சுகந்தா பட்டாச்சார்யா, நாகேஷ் குமார் ஆகிய மூவர் கடந்தமாதம் நியமிக்கப்பட்டு நிதி கொள்கை கமிட்டி மறுசீரமைக்கப்பட்டது. இதன் பின்னர் நடந்த முதல் கூட்டம் இதுவாகும்.