டெல்லி: நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற முதல் நாள் கூட்டம் குடியரசு தலைவர் உரையுடன் இன்று (ஜூன் 24) தொடங்கியுள்ளது. மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல, மாநிலங்களவையின் 264 வது அமர்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதனிடையே, இடைக்கால சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்த்ருஹரிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நாளான இன்று 280 எம்பிக்களும், இரண்டாம் நாளில் 260 எம்பிகளும் பதவியேற்க உள்ளனர். இதனிடையே, பிற்பகலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 எம்பிகளாக தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கூட்டணியின் திமுக உறுப்பினர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் 7 கட்டங்களாக மொத்தமுள்ள 544(சூரத் நீங்கலாக) தொகுதிகளில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 293 தொகுதிகளை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கைப்பற்றியது. அதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்கள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனிடையே, பாஜகவிற்கு (240) ஆட்சியமைக்க (272) தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஐக்கிய ஜனதா தளம்(12), தெலுங்கு தேசம் கட்சி(16) ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், துணை சபாநாயகர் பதிவியேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எம்பிக்கள் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வேளையில், துணை சபாநாயகர் பதவியேற்க இந்தியா கூட்டணி கட்சியின் 3 எம்பிக்களும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.