புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. கஞ்சா போதை தலைக்கேறிய இரண்டு நபர்களின் வெறிச்செயலால் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமியின் கொலைக்கு நீதி வழங்க வேண்டி தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்தும் குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், புதுச்சேரியில் போதை பொருட்களை ஒழிப்பதை வலியுறுத்தியும், அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 8) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பந்த் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. மேலும், கடையடைப்பு என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு, பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தேர்வுகள் தடையின்றி நடக்கும் என்றும் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் போராட்டத்தின் போது அளிக்கப்படாது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடலூரில் இருந்து வரும் தமிழக அரசு பேருந்துகள் முள்ளோடை எல்லை வரையிலும், விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டு வரையிலும், கிழக்கு கடற்கரை சாலை வழியே வரும் பேருந்துகள் கோட்டக்குப்பம் வரையிலும், திண்டிவனம் வழியாக வரும் பேருந்துகள் கோரிமேடு எல்லை வரையிலும் திருப்பி விடப்படுகின்றன.
புதுச்சேரி அரசு பேருந்துகள்: புதுச்சேரி அரசு பேருந்துகளை இயக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊழியர்கள் தொழிற்சங்க கட்டுபாட்டில் இருப்பதால் வாகனங்களை இயக்க ஊழியர்கள் எவரும் வராததாகத் தெரிகிறது. இந்நிலையில், காரைக்காலில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றி வந்த ஒரு அரசு பேருந்து மட்டும் மீண்டும் காரைக்கால் திரும்பிய போது, அதில் ஏராளமான பயணிகள் ஏறிச் சென்றனர்.
இதற்கிடையே, வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கடையடைப்பு காரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக பந்த் நடத்துவதால் புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியைப் போன்று காரைக்காலிலும் இன்று பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் உள்ளன. மேலும், வெளிமாநில பேருந்துகள் புதுச்சேரி - தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆருத்ரா - ஹிஜாவு - ஐஎஃப்எஸ் மோசடிகளுக்கு ஒரே ஏஜெண்ட் மூளையாகச் செயல்பட்டதாக தகவல்!