டெல்லி : வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை மார்ச் 31ஆம் தேதி வரை தொடர்வதாக மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச அளவில் வெங்காயத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் உற்பத்தி சரிவைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை அதிகரித்தது. இதையடுத்து 2024 மார்ச் 31ஆம் தேதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனிடையே வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்து உள்ள நுகர்வோர் விவகாரங்களுக்கான செயலாளர் ரோகித் குமார், வெங்காயத்தின் மீதான தடை நீக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த அறிவிப்பில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
உள்நாட்டில் வெங்காயத்தின் கையிருப்பை சீராக அளவில் வைத்துக் கொள்ளவும், வீண் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே அரசின் உச்ச முன்னுரிமை என அவர் தெரிவித்து உள்ளார். பொருட்களின் மீதான ஏற்றுமதி தடை நீக்கம் குறித்த அறிக்கைகளின் பேரில், நாட்டின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லாசல்கோவானில் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,280 ஆக இருந்த வெங்காயத்தின் விலை பிப்ரவரி 19 அன்று குவிண்டாலுக்கு 40.62 சதவீதம் அதிகரித்து ரூ.1,800 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னரும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 2023 ரபி பருவத்தில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் போதிய அளவில் வெங்காயம் உற்பத்தியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த 2023 ரபி பருவத்தில் 22 புள்ளி 7 மில்லியன் டன் வெங்காயம் உற்பத்தியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் அமைச்சக அனுமதியின் கீழ் நட்பு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்மதி செய்ய அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் பெருவாரியான வெங்காயம் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!