டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து மக்களவையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவிலல்லை என்று தெரிவித்தார். அதன்படி இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படாமல் பழைய வரி விகிதங்களே தொடர்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அரசின் வரி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பால் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் காலாவதியாகும் வரி விகிதங்களின் மூலம் அரசு சொத்துகள் மற்றும் ஓய்வூதிய நிதிகளின் மூலம் பெறும் முதலீடுகள் மற்றும் வரி விலக்கு மூலம் நிதி ஆதாரத்தை பெருக்க முடியும் எனத் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2009 -10 நிதி ஆண்டில் நிலுவையில் உள்ள நேரடி வரி விகிதங்கள் தொகையான 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 2010 -11 முதல் 2014 - 15 வரையிலான வரி விகிதங்களின் தொகை 10 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்தார். இதன் மூலம் வரி செலுத்துபவர்களின் கடன் சுமைகள் குறையும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
2024 - 25 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2023- 24 நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5 புள்ளி 9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2025-26 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4 புள்ளி 5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். நடப்பாண்டில் மூலதன செலவீனங்களுக்கான தொகையை 11 புள்ளி 1 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் நிதி பற்றாக்குறையை கணிசமாக குறைக்க முடியும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
முன்னதாக கடந்த 2023 - 24 நிதி ஆண்டில் மூலதன செலவீனங்களுக்கான தொகை 33 சதவீதம் உயர்த்தப்பட்டு 10 லட்சம் கோடி ரூபாயாக நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024-25 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீத என்ற அளவை நெருங்கி பயணித்து கொண்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : Budget 2024: மூலதன செலவீனங்களுக்கான நிதி அதிகரிப்பு - வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் - நிர்மலா சீதாராமன்!