பெங்களூரு: சமுக வலைத்தளங்களில் கடந்த மூன்று நாட்களாக ஒருவரது தற்கொலை குறித்து நெட்டிசன்கள் விவாதித்தும், பெண்களால் பதிவாகும் வழக்குகளில் ஆண்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்த, உபி-யை சேர்ந்தவர் அதுல் சுபாஷ் (34). இவர் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவில் உள்ள அறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூடவே அவர் எழுதியிருந்த 24 பக்க தற்கொலை கடிதமும் சிக்கியுள்ளது. இந்த சம்பவம்தான் இன்று ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
என்ன நடந்தது?
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுபாஷ் திடீரென்று கடந்த திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக ஹொய்சால காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது. விரைந்து வந்த போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108 3(5)ன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கினர்.
இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த சுபாஷின் குடும்பத்தாரிடம் சுபாஷ் எழுதி வைத்திருந்த 24 பக்க தற்கொலை கடிதத்தை போலீசார் காண்பித்தனர். அதனை தொடர்ந்து, சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார் சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார், மைத்துனர் மற்றும் மனைவியின் மாமா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
காவல்துறை அறிக்கை
சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார் அளித்த புகாரின்படி, அதுல் சுபாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு நிகிதா சிங்கானியா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயது மகனும் உள்ளார். ஆனால், நிகிதா எட்டு மாதங்களுக்கு அவரை விட்டு பிரிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். நிகிதா தனது தாய் மற்றும் சகோதரர் உதவியுடன் கணவர் அதுல் சுபாஷ் மற்றும் முழு குடும்பத்தினர் மீது மீது பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நிகிதா, அதுல் சுபாஷை அவரது மகனைச் சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை, மேலும் ரூ.30 லட்சம் பணம் கேட்டிருக்கிறார். இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில் அதுல் சுபாஷ் ஆஜரானபோது, '3 கோடி ரூபாய் கொடுங்கள், இல்லையெனில் செத்து விடுங்கள்' என்று அவரை கிண்டல் செய்துள்ளனர். பொய்யான புகார் மற்றும் பெரும் தொகைக்கான கோரிக்கை ஆகியவற்றால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அதுல் சுபாஷ், தற்கொலை செய்து கொண்டதாக பிகாஸ் குமார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். பிகாஸ் குமார் புகாரின் பேரில் மாரத் ஹள்ளி காவல் நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார், மைத்துனர் மற்றும் மாமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுபாஷ் சகோதரர் குமுறல்
பிகாஸ் குமார் மேற்கொண்டு அளித்த பேட்டியில், இந்த வழக்கின் காரணமாக சுபாஷ் பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் நீதிமன்றத்துக்கு குறைந்தது 40 முறையாவது வந்திருப்பான். நீதிமன்றமும் சுபாஷின் மனைவிக்கு ஆதரவாகவே செயல்பட்டது. சுபாஷ் தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்டான். நீதிமன்றத்தில் உள்ள ஒரு அதிகாரி நீதிபதி முன்பாகவே லஞ்சம் வாங்கி இருக்கிறார்.
சுபாஷ் எப்போதாவது என்னிடமோ அல்லது எங்கள் தந்தையிடமோ அவனது கஷ்டத்தை குறித்து விவாதித்திருந்தால் இந்த சூழ்நிலையிலிருந்து உங்கள் அவனை மீட்டிருப்போம். இந்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்று மட்டும்தான்; என் சகோதரன் உண்மையுடன் இருந்திருந்தால் அவனுக்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையெனில் அவன் செய்தது தவறு என்று நிரூபிக்க எனக்கு ஆதாரம் கொடுங்கள். எனது சகோதரரின் தற்கொலைக் குறிப்பில் உள்ள நீதிபதி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று சுபாஷின் சகோதரர் குமார் கூறியுள்ளார்.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட சுபாஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெல்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்து பேசியிருந்தார். அதில், நீங்கள் இதைப் படிக்கும் போது (தற்கொலை கடிதம்) நான் இறந்திருப்பேன். இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டரீதியான இனப்படுகொலை நடந்து வருகிறது. இங்குள்ள பல சித்தாந்தங்கள், கருக்கலைப்பு ஆகியவற்றிலிருந்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுங்கள். இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுங்கள்'' என கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கறிஞர் கருத்து
இந்த வழக்கின் தீவிரம் குறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அபா சிங், ஏஎன்ஐயிடம் பேசுகையில், '' இந்த வழக்கு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. வரதட்சணைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.