சண்டிகர்: மேயர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக, ஆம் ஆத்மி கட்சி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்.19) நடைபெற உள்ள நிலையில், சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டனர். இதில்,பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இதனால், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஆம் ஆத்மி கட்சியினர், பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு, பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சீர்குலைத்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று(பிப்.19) நடைபெற உள்ள நிலையில், சண்டிகர் மேயர் பதவியில் இருந்து மனோஜ் சோன்கர் விலகியுள்ளார்.
முன்னதாக, பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில், நேஹா, பூனம் மற்றும் குர்சரண் கலா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அருண் சூட் தெரிவித்துள்ளார். மேலும், புதிய மேயர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம், மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பக்கம் மாறுவது பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: இணைய சேவை முடக்கம் பிப்.24 வரை நீட்டிப்பு! பேச்சுவார்த்தை இழுபறி!