டெல்லி: இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பான ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் இன்று மாலை தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், "பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு அரசியல் ரீதியான தோல்வியை மக்கள் அளித்துள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக கட்சியை அகற்ற முயற்சி எடுப்போம். பாஜக கட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மேலும், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல் படி, 2019ல் பாஜக தனித்து 303 தொகுதிகள் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால், இந்த முறை 240 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை மீறி இந்தியா கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமராக நரேந்திர மோடியை ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் 8ஆம் தேதி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ராஜினாமா! குடியரசுத் தலைவரின் வலியுறுத்தல் என்ன? - PM Modi Resign