ராஞ்சி: லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு பிறகு கொலை செய்துவிட்டு, உடலை 50 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய நபரை ஜார்கண்ட் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா. இவருக்கு 25 வயதாகிறது. நரேஷ் அதே மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நரேஷ் தமிழகம் வந்து அங்குள்ள கோழி கறி கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
காதலிக்கு தெரியாமல் திருமணம்
மேலும், இருவரும் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்டுக்கு தனியாக வந்த நரேஷ் அங்குள்ள பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தை தன்னுடன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு சொல்லாமல் மறைத்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்து மனைவியை கிராமத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு நரேஷ் மட்டும் தமிழகம் வந்துள்ளார்.
மாயமான இளம்பெண்ணின் கதி
நரேஷுக்கு திருமணம் ஆன விஷயம் தெரியாமல் இருந்த அந்த பெண், தன்னை ஜார்கண்ட்டிற்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். அதன்படி நவம்பர் 8 ஆம் தேதி இருவரும் ரயில் மூலம் குந்தி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். ஆனால், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் இந்த பெண்ணை தனது வீட்டுக்கு செல்ல நரேஷ் விரும்பவில்லை. இதற்கிடையே, நரேஷுடன் வந்த காதலி காதலனுடன் குந்திக்கு வந்திருப்பதை தனது தாய்க்கு போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அதன் பிறகு மாயமான இளம்பெண், 16 நாட்கள் கழித்து, காட்டில் சிறுசிறு துண்டுகளாக உடல்கள் வெட்டப்பட்டு கிடந்ததை தெரு நாய் மூலமாக போலீசார் கண்டறிந்த சம்பவம் அதிர வைக்கிறது.
குந்தி காவல்துறை அதிகாரி அமன் குமார், ''நவம்பர் 8 ஆம் தேதி குந்தி மாவட்டத்துக்கு வந்த நரேஷ் பெங்ரா நேராக வீட்டுக்கு செல்லாமல் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் காதலியை அழைத்துக்கொண்டு தனது கிராமத்துக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதி பக்கமாக சென்றுள்ளார். அதன் பின்னர், தான் வீட்டுக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு போனவர், கறி வெட்டும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதத்துடன் திரும்பி வந்துள்ளார்.
கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை
பின்னர் அங்கு காத்திருந்த காதலியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துவிட்டு, உடலை 50 துண்டுகளாக வெட்டி வீசிவிட்டு தப்பியுள்ளார். நவம்பர் 24 ஆம் தேதி தெரு நாய் ஒன்று மனித உடல் உறுப்புகளை கவ்விக்கொண்டு வந்ததை அடுத்து, காவல்துறையினர் சந்தேகப்பட்டு காட்டுக்குள் சோதனையிட்டபோது ஒரு பையும், அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் அட்டை உள்ளிட்டவைகள் இருந்தன.
அதை வைத்து பெண்ணின் தாயை சம்பவ இடத்துக்கு வரவழைத்த பிறகு அவர் தனது மகளின் உடமைகள்தான் என்று உறுதி செய்தார். மேலும், நவம்பர் 8 ஆம் தேதி குந்தி மாவட்டத்துக்கு வந்த இளம்பெண் தனது காதலனுடன் வந்ததாக அவரது தாய்க்கு தகவல் அனுப்பி இருந்ததால், நரேஷ் பெங்ராவை எளிதாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக காதலியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்