கேரளா: மலப்புரம் மாவட்டத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய வகை மூளைத் தொற்று நோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி, மே 1ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது, சிறுமி அசுத்தமான தண்ணீரில் குளித்ததால், இந்த அரிய வகை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறுமியுடன் சேர்ந்து குளத்தில் குளித்த மற்ற 2 குழந்தைகளையும் கண்காணிப்பில் வைத்து பரிசோதித்துள்ளனர். ஆனால், மற்ற இருவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அச்சிறுமிகள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அமீபிக் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மே 13ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் 2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Amoebic Meningoencephalitis என்றால் என்ன? அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் ஒரு வகை மூளைக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை அமீபாவால் ஏற்படும் மிகவும் அரிதான, ஆபத்தான மூளைத் தொற்றாகும். இந்த நோய் பொதுவாக அசுத்தமான தண்ணீரில் நீந்தும் போது, மூக்கு வழியாக மூளைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நோய் சுமார் 1 முதல் 2 வாரங்களுக்குள் துவங்குகிறது.
நோய் அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, வலிப்பு தாக்கங்கள், கழுத்து இறுக்கம், தூக்கமின்மை, வாசனை இழப்பு ஆகியவையாகும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது, சுவை உணர்வு இழத்தல், மங்கலான பார்வை போன்றவை தோன்றும்.