டெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையின மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவ 14 பேரிடம் அதற்கான சான்றிதழ்களை டெல்லியில் வைத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராக பல கட்டங்களாக போராட்டம் வெடித்தன. தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை பெறுவதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் அங்கிருந்து வரும் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது என்பதாலும் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் வகுப்பது குறித்து சிறப்பு குழு நியமிக்கப்பட்டது.
சிறப்பு குழுவின் பரிந்துரையை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் குடிரியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும், குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடைபெறும் என்பதால் மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு அவர்களின் பரிந்துரையின் கீழ் குடியுரிமை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திராவில் தேர்தல் மோதல்களால் பதற்றம்: தலைமை செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்! - Lok Sabha Election 2024