இந்தூர் (மத்திய பிரதேசம்): இந்திய கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் ராணுவ வீரர்களை, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, அந்நாட்டு பாதுகாப்புப் படை கடந்த 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் தரப்பில் இருந்து பல முறை ஜாமீன் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆனால், ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்த கத்தார் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை எப்படியாவது தாயகம் மீட்டுத் தருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் வெளியுறவு அமைச்சகத்தில் தொடர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை ஏற்ற வெளியுறவு அமைச்சகமும், அவர்களை விடுவிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தது.
அதன்பிறகு, வெளியுறவுத்துறை தரப்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கத்தார் நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்களின் மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவித்து கடந்த பிப்ரவ்ரி 12ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்படை ராணுவ வீரர்கள் 8 பேரும் பத்திரமாக தாயகம் திரும்பியதாக அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டது. தற்போது பத்திரமாக நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விடுதலை அடைந்த முன்னாள் கடற்படை வீரரான கேப்டன் P.K.வர்மா கூறுகையில், "பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீட்டால் தான் இந்த விடுதலை சாத்தியமானது. நான் இங்கு இருப்பதற்கு அவர் தான் காரணம். இதற்காக என் சார்பாகவும், என்னுடன் விடுதலையான அனைத்து முன்னாள் கடற்படை வீரர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எங்கள் மேல்முறையீட்டினை பரிசீலித்ததற்காக கத்தார் அமீருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நவம்பர் 27, 2022-ல் நடைபெற்ற எனது மகளின் திருமணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இது எனக்கு சாதாரணமான ஒன்றே. ஏனெனில் கடற்படை அதிகாரியாக இருந்தபோது, பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆகையால், என்னால் குடும்பத்திற்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாது.
இது அனைத்தும் வாழ்வின் ஒரு பகுதியே. தற்போது இங்கு அனைவருடனும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கடினமான காலங்களில், என் குடும்பத்திற்கு ஆதரவாக நின்ற அனைத்து நண்பர்களையும் சந்தித்து அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயணிக்கு நட், போல்ட் விழுந்த சான்ட்விச்: இண்டிகோ வழங்கியதா? என்ன நடந்தது?