பஸ்டர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீசார் அடங்கிய குழுவினர் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. அபுஜ்மத் வனபகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு கடும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த வீரர், காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பஸ்டர் ஐஜி சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குதுல், பராஸ்பேடா மற்றும் கோட்டமேட்டா ஆகிய அபுஜ்மத் வனப் பகுதியைச் சுற்றிய பகுதிகளில் வழக்கமான நக்சல் எதிர்ப்பு ரோந்து பணி நடைபெற்றதாக தெரிவித்தார்.
நாராயண்பூர், காங்கர், தண்டேவாடா மற்றும் கொண்டகான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அதில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜூன் 14ஆம் தேதி அன்று நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 8 நக்சலைட்டுகளில், பலர் மீது ஏற்கனவே பல லட்ச ரூபாய் பரிசுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டு இருந்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் உருவாகி வரும் ஊடக சிற்பி ராமோஜி ராவ் சிலை.. எப்போது திறப்பு? - STATUE OF RAMOJI RAO