துவாரகா (குஜராத்): குஜராத் மாநிலம், பேட் துவாரகா தீவு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, இங்கு உள்ள அரபிக்கடலுக்கு அடியில் பண்டைய துவாரகா நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடலுக்கு அடியில் சென்று மக்கள் பார்க்கும் வண்ணம் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் சுமார் 980 கோடி ரூபாய் செலவில் அரபிக்கடலில் பேட் துவாரகா தீவையும், ஓகாவையும் இணைக்கும் விதமாக 2.32 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமான 'சுதர்சன சேது'வை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) திறந்து வைத்தார்.
அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி பஞ்ச்குய் கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்தார். மேலும், கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா நகரை பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமானது என தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைத்தளப் பதிவில், "கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தை பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. மேலும், காலத்தால் அழியாத ஆன்மீக மகத்துவம் கொண்ட பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். மேலும், கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என தெரிவித்திருந்தார்.
அதன்பின், துவாரகாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயிலிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். இன்று (பிப்.25) குஜராத்தில் துவாரகாவிலிருந்து ரூ.4,150 கோடி மதிப்பிலான நாட்டின் பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, நாட்டின் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடி மதிப்பிலான 200 சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்), மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையையும், புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, தமிழகத்திற்கு சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?