டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் மே 21ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதாவது, இந்திரா காந்தி மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, இவர் 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7வது பிரதமராக இருந்தவர். 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1984ல் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்ற போது அவரது வயது 40. இந்தியாவின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர்.
மேலும், 1989 டிசம்பர் 2ஆம் தேதி வரை பிரதமராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து 14 அப்பாவி உயிர்களும் பலியான சோக சம்பவம் அரங்கேறியது. தாயின் மறைவுக்குப் பிறகு பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, தனது தாயைப் போலவே படுகொலை செய்யப்பட்டார். இதனால், மே 21ஆம் தேதி ஆண்டுதோறும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.