தட்சிண கன்னடா: கர்நாடக மாநிலம் கடபாவில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில், இன்று (மார்ச் 4) காலை 2ம் பியூசி தேர்வுக்குத் தயாராகி வந்த 3 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதையடுத்து, ஆசிட் வீச்சுக்கு ஆளான கல்லூரி மாணவிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடபா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆசிட் வீச்சில் ஈடுபட்ட கேராளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த எம்.பி.ஏ படித்து வரும் அபின் (23) என்பரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோன்.
இவர் கல்லூரி மாணவர் போல் உடையணிந்து, சந்தேகம் வராதவாறு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, மாணவிகள் மீது ஆசிட்டை வீசி தப்பியோடி உள்ளார். இச்சம்பவத்தில், மூன்று மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவிக்கு பலத்த காயமும், அவர் அருகில் அமர்ந்திருந்த இரு மாணவிகளுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் மூவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தட்சிணா கன்னடா எஸ்.பி ரிஷ்யந்த் சிபி கூறுகையில், "கடபா அரசு கல்லூரி வளாகத்தில், மாணவி மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தின் போது, மாணவியின் அருகில் இருந்த மற்ற இரு மாணவிகள் மீதும் ஆசிட் தெரித்த நிலையில், அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அபின் (23) ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளார்.
காதல் தோல்வி காரணமாக இந்த ஆசிட் வீச்சில் இளைஞர் ஈடுபட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் தேர்வுக்கு தயாரக்கிக் கொண்டிருந்த மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவி, மாமனார் கொலை வழக்கு: மகள் அளித்த சாட்சியத்தால் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!