அமராவதி: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக சந்திரபாபு நாடு பொறுப்பெற்றுள்ளார். இவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, ஆந்திர மாநிலம் சாந்திபுரம் மண்டலம் கடப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சிவபுரத்தில் நிலம் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் வீடு கட்ட நில பயன்பாட்டு மாற்றத்திற்கு தெலுங்கு தேசம் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிலத்தை பிரித்து தரும்படி நிலஅளவைத் துறையிடம் கேட்ட போது, துணை சர்வேயர் சதாம் உசேன் 1.80 இலட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் துணை சர்வேயரிடம் அந்த தொகையை கொடுத்த பின்னர், அடுத்தடுத்த பணிகள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் குப்பம் விருந்தினர் மாளிகையில் உள்ளூர் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தயின் போது, இவ்விவகாரம் விவாதத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார் மற்றும் இணை ஆட்சியர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் கேட்ட போது துணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின்னர் நிலஅளவைத் துறை இணை ஆணையர் கவுஸ்பாஷா நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதுஒருபுறம் இருக்க கடந்த 27ஆம் தேதி சாந்திபுரம் மண்டலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நில அளவைக்கு விண்ணப்பித்த போது அவரிடமும் துணை சர்வேயர் சதாம் உசேன் 1 இலட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதிலும் சதாம் உசேன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் துணை சர்வேயர் சதாம் உசேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி இணை ஆணையர் ஸ்ரீனிவாசலு நில அளவை பிரிவு உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2000ல் போடப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு.. சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு! - Medha Patkar