மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில் உள்ள திருமண மண்டபத்தில் வேலை புரியும் காவலாளியின் மகன் மோகித் விஜய். இன்று (மார்ச் 6) தனது தந்தை வேலை செய்யும் மண்டபத்திற்கு வந்த விஜய், ஒரு அறையில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த அறைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
சிறுத்தையைக் கண்டு சுதாரித்துக் கொண்ட சிறுவன், எந்த ஒரு பதற்றமும் இன்றி, நிதானமாக அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகர்ந்து, சிறுத்தையை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு ஓடியுள்ளார். பின்னர், சிறுவன் தனது தந்தையிடம் சிறுத்தை குறித்து தெரிவித்த நிலையில், உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அறையில் சிக்கி இருந்த சிறுத்தைக்கு ஜன்னல் வழியாக மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தை மயக்கம் அடைந்தவுடன், அதை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்டிரா சிறுவனின் இந்த சாமர்த்தியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் - என்.ஐ.ஏ அறிவிப்பு!