தமிழ்நாடு

tamil nadu

கீழகல்கண்டார் கோட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

By

Published : Aug 26, 2020, 7:25 PM IST

மதுரை: கீழகல்கண்டார் கோட்டை விவசாயம் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுத்த வேண்டும் என்ற வழக்கு தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் புகைப்படத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

mdu

திருச்சி மாவட்டம், கீழ்கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கீழ்கல்கண்டார் கோட்டை பகுதியில் 2000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

600 ஏக்கர் பகுதியில் வாழைப்பழம், நெல், உளுந்து ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கீழ்கல்கண்டார் கோட்டை கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என இரண்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நிலம், நீர், காற்று, பொது சுகாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை உள்ளது.

மேலும், விவசாய நிலம் நஞ்சாக மாறவும், நிலத்தடி நீர் மாசுப்படும். வேதியல் பொருட்களை வைத்து கழிவு நீர் சுத்தம் செய்யப்படுவதால் காற்று மாசுபடும் சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள், விவசாயம் மற்றும் விலங்குகள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இவற்றை நிறுத்த பல்வேறு அலுவலர்களை சந்தித்து மனு அளித்தும் பயன் இல்லை. எனவே, விவசாய நிலங்கள் மற்றும் சுற்று சூழலை பாதுகாக்க இந்த இரண்டு திட்டங்களையும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்திரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனைத்து அனுமதிகளையும் பெறப்பட்டதாக ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்லாத வகையிலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசாத வகையிலும் அதன் கட்டமைப்பு இருக்க வேண்டும். மேலும் நடைபெற்றுவரும் கட்டட வேலைகள் குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாநகராட்சி ஆணையர் புகைப்படத்துடன் தங்களது அறிக்கையை வரும் செப்டம்பர் 6ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details