சென்னை : உயர்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் 20%மும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15%மும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 10% மாணாக்கர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் 2024-25 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளில் 20% கூடுதலாகவும், அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆய்வக
வசதிக்கேற்ப 20% கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேவையுள்ள மற்றும் ஆய்வக வசதிக்கேற்ப அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளுக்கு தேவையுள்ள மற்றும் ஆய்வக வசதிக்கேற்ப 10 சதவீதம் கூடுதலாகவும் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
- மேற்குறிப்பிட்ட 20%, 15% மற்றும் 10% கூடுதல் சேர்க்கையானது சார்ந்த பல்கலைக்கழகங்களால் முதன் முதலில் ஒப்பளிக்கப்பட்ட (based on original intake approved by the University concerned) மாணாக்கர்
சேர்க்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். - கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது.
- கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
- மேற்குறிப்பிடப்பட்ட கூடுதல் சேர்க்கையானது 2024-25-ஆம் கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும்.
- மேலும், இவ்வாணையின் மூலம் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து, கல்லூரி வாரியாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IT ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் குடியிருப்புக்கான சொத்து வரி; அரசுக்கு கோரிக்கை! - IT PG HOSTELS ON INCOME TAX