டெல்லி: இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவத்தில் காமிகேஷ் என்ற சிறப்பு தாக்குதல் பிரிவு செயல்பட்டு வந்தது. அந்த பிரிவின் பெரும் பணியாக இரண்டாம் உலகப் போர் காலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நுழைந்து ஜப்பான் பேரரசை தாக்க வரும் கப்பல்களை அழிப்பது தான்.
விமானப் படை விமானங்கள் மூலம் எதிரி நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் தாக்குதல்களை காட்டிலும் காமிகேஷ் படைகள் மறைந்து இருந்து ரகசிய தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வந்தன. போரில் 3 ஆயிரத்து 800 காமிகேஷ் படைப் பிரிவுகள் வீரர்கள் உயிரிழந்த நிலையில் 7 ஆயிரம் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது இந்தியாவில் இந்த காமிகேஷ் வகை வான்வழி ஆயுதங்கள் முற்றிலும் உள்நாட்டில் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு நாகாஸ்திரா 1 என பெயரிடப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நாகாஸ்திரா 1 ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளது. வெடி மருந்துகளை சுமந்து சென்று எதிரிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த வகை ட்ரோன்கள் சூசைட் ட்ரோன் அதாவது தற்கொலை ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது.
இதனால் ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து நேர்வது பெரும் அளவில் தவிர்க்கப்படுகிறது. இதற்கு லோட்டார் வெடிமருந்து அதாவது மறைந்து இருந்து தாக்குதல் நடத்தக் கூடிய ஆயுதம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்திய ராணுவம் 480 லோட்டர் வெடிமருந்து அடங்கிய ட்ரோன்களை வாங்குவதற்கு சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்தது.
தற்போது, முதல் தொகுப்பாக ராணுவத்திடம் 120 ட்ரோன்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. நாகாஸ்திரா 1 யுஏவி அமைப்பு வான்வெளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. மற்ற ஆயுதங்களை போல் இல்லாமல் சோலாரின் நாகாஸ்திரா தேவைப்படின் தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் திறன்கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பித்த போதும் பின்னர் அதற்கு தேவை இல்லாத நிலையில் திரும்பவும் அந்த ட்ரோனை மீட்டெடுக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் முறையில் எந்தவொரு இலக்கையும் 2 மீட்டர் வரை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த ட்ரோனை எந்த ரேடராலும் கண்டறிய முடியாது என்பதால் தாக்குதல் தீவிரத் தன்மை என்பது அதிகளவில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், 4 ஆயிரத்து 500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறக்கக்கூடிய இந்த ட்ரோனை ரிமோட் மூலம் கட்டுபடுத்த முடியும் என்பதால் அவசர காலத்தில் தேவைக்கேற்ப அதன் திசைகளை மாற்றி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும்.
மேலும் பகல் மற்றும் இரவு என எந்த கால அளவிலும் இலக்கை துல்லியமாக கண்காணிக்கும் கேமராக்கள், வெடிமருந்துகளை தாங்கிச் செல்லும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த நாகஸ்திரா 1 ட்ரோனில் உள்ளது. இலக்கு கண்டறியப்படாவிட்டால் ட்ரோன் செயல்பாட்டை நிறுத்தி பாராசூட்டை பயன்படுத்தி மென்மையாக தரையிறக்கம் செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மறுபயன்பாட்டு அம்சங்களில் முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை விட நாகாஸ்திரா பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியது.
இந்த வகை வெடிமருந்துகளை சுமந்து கொண்டு செல்லும் ட்ரோன்களை உருவாக்கிய ஒரே நாடு இந்தியாவா? என்று கேட்டால் இல்லை. கடந்த 1980களில் லோட்டர் ஆயுதங்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. எதிரியின் வான் பாதுகாப்புகளை (SEAD) மேற்பரப்பில் இருந்து வான் தாக்கும் ஏவுகணைகளுக்கு (SAMs) எதிராகப் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஈரானில் அபாபில்-1 என்ற இதே வகை ஆயுதம் 1980களில் தயாரிக்கப்பட்டது. இஸ்ரேலிய ஐஏஐ ஹார்பி 1980களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டது. IAI Harpy தவிர, IAI Harop எனப்படும் மற்றொரு தற்கொலை ட்ரோனை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. ஐஏஐ ஹார்பி என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த ஏவுகணையாகும்.
ஹார்பி ரேடார் அமைப்புகளைத் தாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் SEAD அமைப்பிற்கு உகந்ததாக உள்ளது. இது ஒரு உயர் வெடிகுண்டு போர்க்கப்பலை தாக்க வல்லமை கொண்டது. தென் கொரியா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஹார்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாகாஸ்திரா-1 ஆயுதத்தின் திறன்கள் என்ன?
நாகாஸ்திரா-1 என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு மின்சார மோட்டார்கள் மூலம் நிலையான இறக்கை கொண்டு லோட்டரிங் வகை வெடிமருந்து மூலம் இயக்கப்படுகிறது.
இது 15 கிலோ மீட்டர் வரம்பிற்குள் ஒரு ஆபரேட்டரால் கட்டுப்படுத்தப்படலாம் மற்றும் அதிகபட்ச விமான தூரம் 30 கிலோ மீட்டர் தூரம் ஆகும். ட்ரோன் முன் ஏற்றப்பட்ட கிரிட் ஒருங்கிணைப்புகளின் அடிப்படையில் ஒரு நிலையான இலக்கைத் தாக்க முடியும், ஜிபிஎஸ் மூலம் இந்த கருவி கட்டுப்படுத்தப்படுகிறது.
இலக்கிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் துல்லியமாக சென்று தாக்கும் சக்தி கொண்டது இந்த ஆயுதம். அதேநேரம், இந்திய பாதுகாப்புப் படைகளிடம் இருக்கும் முதல் தற்கொலை ஆளில்லா விமானம் நாகஸ்திரா-1 அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பிசி கடோச் எழுதிய எஸ்பியின் ஏவியேஷன் கட்டுரையில், டாடாவால் தயாரிக்கப்பட்ட ALS-50 வெர்டிகல் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) லோட்டரிங் வெடிமருந்துகளை இந்திய விமானப்படையில் இணைத்துக் கொண்டது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்திய ராணுவத்திற்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்ட முதல் தற்கொலை தாக்குதல் ஆயுதம் நாகஸ்திரா 1 என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனா-தென் கொரியா-ஜப்பான் முத்தரப்பு உச்சி மாநாடு: இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? - China japan korea Trilateral summit