விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த நாரணாபுரம் புதூர் பகுதியில் உள்ள சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஏராளமான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அவர்களுள் சிலர் மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த காங்ரேஷ் புய்யான் என்பவர் அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதன் பின்னர், இன்று (திங்கட்கிழமை) காலை அவ்வழியாகச் சென்றவர்கள் இறந்த கிடந்த நபர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த காங்ரேஷ் புய்யான் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக காங்ரேஷ் புய்யான் உடன் மது அருந்திய 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வடமாநில தொழிலாளியான இவர் மது அருந்தும்போது அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது!